இறைச்சிக்கடைகள் ஆலயங்களுக்கருகில் அமைந்துள்ளதனால் இந்து சமய மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஏறாவூர் நகர சபையினால் விசேடகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சபையின் செயலாளர் முற. சியாஹ{ல் ஹக் மற்றும் 5 உறுப்பினர்கள் இக்குழுவில் அங்கம் வகிப்பதாக முதல்வர் ஐ. அப்துல் வாசித் தெரிவித்தார்.
இக்குழுவின் அறிக்கையினை அடிப்படையாகக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஏறாவூர் நகர சபை எல்லைக்குள் இந்து ஆலயங்களுக்கு அண்மித்த பிரதேசங்களில் இயங்கிவரும் கோழி இறைச்சிக்கடைகளை தூர இடங்களுக்கு மாற்றுமாறு நகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகர சபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றுகையிலேயே உறுப்பினர்களான என். சுதாகரன், ஜி. பிரபாகரன் மற்றும் எஸ். சுதாகராசா ஆகியோர் இந்த கோரிக்கையினை முன்வைத்தனர்.
இறைச்சிக்கடைகள் ஆலயங்களுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ளமை ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு முரனானதாக இருப்பதுடன் அறுக்கப்பட்ட பிராணிகளின் துண்டங்களை நாய்கள் மற்றும் காகங்கள் இழுத்துவந்து கோயில் வளாகத்தினுள் போடுவதனால் இந்துக்கள் கவலையடைகின்றனர்.
எனவே இக்கடைகளை ஆலய எல்லையிலிருந்து குறைந்தது நூறு மீற்றருக்கப்பால் அப்புறப்படுத்துமாறு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
உப தவிசாளர் எம்எல். றெபுபாசம் கருத்துத் தெரிவிக்கையில் --இக்கடைகள் கடந்த பல வருடகாலமாக இயங்கிவருகின்றன. ஆலய சடங்குகள் நடைபெறுகின்ற காலங்களில் மாத்திரம் இக்கடைகள் மூடப்படும் நடைமுறை கடந்தகாலங்களில் அமுல்படுத்தப்பட்டது என்றார்.
சபை முதல்வர் அப்துல் வாசித் பதிலளிக்கையில்- விசேட குழுவொன்றை அமைத்து தீர்வு பெறப்படும் என்றார்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.