தமிழ் செம்மொழியுள் தன்னை உட்புகுத்தி விளம்பரமில்லாத தமிழ் விரும்பியாக தமிழை நேசித்து தமிழை வளர்த்த பலருள், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள கன்னங்குடாவைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த 'கலைமணி' மாணிக்கன் சிதம்பரப்பிள்ளை புலவரும் ஒருவராவார்.
1927.09.10 இல் கன்னங்குடாவில் பிறந்த புலவர் மாணிக்கன் சிதம்பரப்பிள்ளை இளமையிலே சைவத்தின்பால் ஈர்க்கப்பட்டு ஆலயங்களில் தன்னை அர்ப்பணித்து சரீரத் தொண்டுகளை மேற்கொண்டு அதன் பயனாகத் தோன்றிய எண்ணங்களை எழுத்துருவாக்கம் செய்ய எத்தனித்தார்.
அதன் அடிப்படையில் தான் இன்று பல்வேறு வகையான கவிநயம் பொருந்திய காவியப்பாடல்கள், தோத்திரப்பாடல்கள், அம்மாணைப்பாடல்கள், கும்மிப்பாடல்கள், நாடகங்கள், வடமோடி, தென்மோடி கூத்துக்கள் போன்றவற்றை நாம் அனுபவிக்கக் கூடியதாக உள்ளது. இந்த வகையில் இவரின் இலக்கியப் படைப்புக்களில்
காவியப்பாடல்களாக, புயல்க் காவியம், புளியடிமடு படபத்திரகாளி அம்மன் காவியம் (1986), கன்னன்குடா கண்ணகி அம்மாள் ஆலயத்தில் கள்வரகள்; பிடிபட்ட காவியம் (1981),
பண்டாரியாவெளி பன்னகன் காவியம் போன்றவையும்
இவரின் தோத்திரப்பாடல் படைப்புக்களாக, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீசுரர் தோத்திரம், கன்னன்குடா கண்ணகி அம்மன் தோத்திரம், அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் தோத்திரம், சனிபகவான் தோத்திரம் போன்றவையும்
அம்மானை, கும்மிப் பாடல்களாக, மட்டக்களப்பு வரலாற்று அம்மானை, திருக்கேதீச்சர அம்மானை, தாந்தாமலை முருகன் அம்மானை, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கும்பி, தியாகதீபம் அன்னை பூபதியின் புகழாரக்கும்மி போன்றவையும்.
வட மோடி நாட்டுக் கூத்துப்படைப்புக்களில்
சத்தியசீலன் நாடகம், கடோற்கசன் நாடகம், நல்லதங்காள் நாடகம், கலிகால நாடகம், கெங்கை அம்மன் நாடகம், அருச்சுனன் காண்டாவனம் ஆகியனவும்
தென்மோடியில் நாட்டுக் கூத்து
லீலாவதி நாடகம், தளுக்குச் சுந்தரி நாடகம், யாதிராசன் நாடகம், புவனேந்திரன் நாடகம், சித்திரபுத்திரர் நாடகம் ஆகியனவும் புலவரது படைப்புக்களை அலங்கரிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட படைப்புக்கள் தவிர 'மட்டக்களப்பு வரலாற்று அம்மானை' என்ற படைப்பு 1979ல் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இக்கால வட்டத்தை நோக்குகையில் கிடைக்காத அச்சுவடிவங்கள் அதிகம் என்பது உண்மையாகும். எது எவ்வாறாயினும் புவலர் அவர்கள் படைத்துள்ள
'மட்டக்களப்பு வரலாற்று அம்மானை' என்ற படைப்புக்கு மதிப்புரை வழங்கியுள்ள அந்நாள் மட்டக்களப்பு மாவட்ட சனசமுக அதிகாரியாகிய ம.சற்குணம் அவர்கள்,
கிழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பானது புலவரின் படைப்பை மேலும் சிறப்பித்துள்ளது அக்குறிப்பானது,
'மட்டக்களப்பு வரலாறு பற்றி அறிந்து கொள்ள. ஒரு சில நூல்களே கிடைக்கும் இந்நாளில் மட்டக்களப்பு வரலாற்று அம்மானையை இலகுதமிழில் பாடி வெளியிட்டு வைக்கும் சிதம்பரப்பிள்ளை புலவரை மட்டக்களப்பு, வரலாறு எழுதுவோர் மிகவும் எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்று நம்புகின்றேன்'. என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறப்புப்பெற்று விளங்கும் புலவர் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 1985இல் இந்து கலாசாரப் பேரவையானால் 'கலைமணி' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். நாட்டுக்கூத்துப் படைப்பினூடாக வானொலி நிகழ்ச்சிப் புகழையும் பெற்றுள்ளார்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை 1989 'கலைஞர் கௌரவம்' என்ற பாங்கினுள் புலவரைப் பாராட்டிக் கௌரவித்துள்ளனர்.
எழுத்தாற்றல் மூலமாக படைப்பாற்றலை தன்னகத்தே கொண்ட புலவர் சமுகசேவை, ஆலயத்தொண்டு என்ற மகத்தான பக்கத்தையும் விட்டுவைக்கவில்லை
குறிப்பாக இவர்,
கன்னன்குடா கண்ணகி அம்மாள் ஆலய வீதியில் அன்னதானம் வழங்கும் கரும தொண்டினை அன்னார் தனது முயற்சியில் ஆரம்பித்து அவ்விடத்திலேயே 1972ல் அன்னதான மடம் ஒன்றினையும் அமைத்து தனது தடம் பதித்தவர்.
இவ்வாறு புலவர் பயணித்த பாதை மிக பெறுமதி மிகுந்த பாதை என்பது கண்கூடு, ஆயினும் இன்றைய இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்மொழியின் பற்றாளர்கள் இவ்வாறானவர்களை கண் கண்டுகொள்வது கட்டாயமாகும்.
இவ்வாறு பல துறைகளிலும் பெரும் பணிசெய்த புலவர் மாணிக்கன் சிதம்பரப்பிள்ளை 1990.06.14 அன்று இறைபதம் அடைந்தபோதும் இவரது படைப்புக்களும் சேவைகளும் இன்றும் மக்களிடையே புகுந்துள்ளது என்பது நிதர்சனம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.