பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை!
மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்தமையினால் பொத்தானை அணைக்கட்டு இருபத்தைந்து அடியில் உடைப்பெடுத்தமையினால் பொத்தானை பிரதேசத்திலுள்ள ஐயாயிரம் விவசாய நிலங்கள் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அணைக்கட்டு உடைப்பெடுத்தமையால் தற்போது வயல் நிலங்கள் ஆறு போன்று காட்சியளிப்பதுடன், நீரில் ஓட்டம் அதிவேகத்தில் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக பொத்தானை கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்தமையினால் எழுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வேளான்மையை முற்று முழுதாக இழந்த நிலையிலும், இதன் காரணமாக பெற்றுக் கொண்ட கடன் தொகையை செலுத்துவது எவ்வாறு என்ற கவலையிலும் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு விவசாய நடவடிக்கைக்காக பொத்தானை பகுதிக்கு சென்று திரும்பி வரமுடியாமல் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை முப்படையினரின் உதவியுடன் படகுகள் மூலம் கொண்டுவரும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முப்படையினர் மீட்டு வரும் பணி மாவட்டத்தில் இடம்பெறுகின்றது.
அத்தோடு புணாணை அணைக்கட்டின் பத்து வான் கதவுகள் 12 அடிக்கு திறக்கப்பட்டு காணப்படுகின்றது. இதன் காரணமாக பல கிராமங்களுக்கு வெள்ள நீர் செல்லும் நிலைமை காணப்பட்டு வருகின்றது. இதனால் குடியிருப்பில் வாழும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இம் மாவட்டத்தில் மாதுறு ஒயா பெருக்கெடுத்த அனர்த்தத்தில் முறுக்கன்தீவு, பிரம்படித்தீவு, சாராவெளி, பொண்டுகள்சேனை, பூலாக்காடு, அக்குறானை, முறுத்தானை, கல்லடிவெட்டை, கானாந்தன்னை, வடமுனை, உத்துச்சேனை கொக்குஞ்சுமடு, சோதயன்கட்டு, வண்ணாத்தியாறு, காத்தான்டவாடி, ஆட்டுகாலை, கித்துள் உட்பட பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.