(வவுணதீவு நிருபர்)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குமாறும் ஆதரவு வழங்கும் பட்சத்தில் அதற்கு பிரதி உபகாரமான கேட்டும் உதவிகளை செய்துதருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஒருவர் பேரம் பேசியதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் சனிக்கிழமை மாலை தெரிவித்தார்.
மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலே இவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரை மேற்படி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் சந்தித்துள்ளார். தொடர்ந்து கட்சியின் செயலாளராகிய என்னையும் சந்தித்தார்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் பேசு பொருளாக இருப்பது எமது தலைவர் சந்திரகாந்தன் பெயர்தான் உள்ளது.
அண்மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ச அவர்கள் கூறினார் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு சந்திரகாந்தன் போன்றோர் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று, அதேவேளை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திரகாந்தன் தொடர்பில் அவர் முதலமைச்சருக்கு தகுதி இல்லாதவர் போன்ற சாயலில் மிக காரசாரமான கருத்துக்களை வௌியிட்டிருந்தார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஒருவர் தனது கட்சி சார்பில் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு பேரம் பேசியதுடன், தாம் வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு விடுதலை செய்வதாகவும், கேட்கும் உதவிகளை வழங்குவதாகவும் இவர் கூறினார்.
எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைவர் சந்திரகாந்தனும் மிக தௌிவாக இருக்கின்றோம். இந்த நாட்டின் சட்டத்தின்படி அவர் வௌிவரவேண்டும், அவர் நீதியை நம்பி சிறையில் இருக்கின்றார் இன்பதையும் நாம் அவருக்கு தௌவுபடுத்தினோம்.
எனவே இவ்வாறான ஐக்கிய தேசிய கட்சி போன்றவர்கள் வௌியில் ஒரு கதையும் உள்ளுக்குள் வேறொரு கதையும் பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி காலத்தை கழிக்கின்றனர். என செயலாளர் பிரசாந்தன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.