ஆனால் நாங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு இருக்க வேண்டும், சமஸ்டி இருக்கவேண்டும், எங்களை பாதிக்கின்ற பாதிப்பை ஏற்படுத்துகின்ற பேரினவாத அல்லது பெருந் தேசியவாதத்தின் அடிப்படையில் செயற்படுகின்றவர்களுக்கு எடுபிடிகளாக அல்லது அவர்கள் நினைக்கின்ற மாதிரி எங்களை உருட்டி விளையாடுகின்ற காய்களாக மாறக் கூடிய நிலைக்கு நாங்கள் செல்லக் கூடாது. என்கின்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.
என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள தமது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 28ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு தமிழ் ஒன்றியம் நடாத்திய கூட்டம் தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
கிழக்கு தமிழ் ஒன்றியம் ஒற்றுமையை அடிப்படையாக வைத்துத்தான் அண்மையில் மட்டக்களப்பில் அந்தக் கூட்டத்தை கூட்டியிருந்தார்கள்.
ஒற்றுமை என்கின்ற எண்ணக்கரு விழுமியம் உண்மையில் எல்லோருக்கும் விருப்பத்திற்குரிய விடயமாகும். அந்தவகையில் தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்துகின்ற கூட்டமாக இருந்தபடியால் நாங்கள் அதில் கலந்துகொண்டோம்.
ஒவ்வொருவருடைய கருத்தும் எந்தக் கோணத்தில் இருக்கின்றது, எந்தப் போக்கில் இருக்கன்றது என்பதை அவதானிப்பதற்கு சந்தர்ப்பமாகவும் அது அமைந்திருந்தது.
ஆகவே ஒற்றுமையாக இணைந்து பயணிப்பது என்பது நல்ல விடயம், ஆனால் ஒற்றுமைக்கும் ஒரு கொள்கை என்பது அடிப்படையாக இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் கிழக்கு தனித்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இங்கு ஒரு கட்சி உள்ளது,
வடக்கு கிழக்கு இணைப்பு , சமஸ்டி வேண்டும் என எமது நிலைப்பாடு உள்ளது. எனவே ஒரு கொள்கை அடிப்படையில் ஒற்றுமை உருவாக வேண்டும் என்பது மிக அவசியமானதொன்றாகும்.
எங்களை பாதிக்கின்ற பாதிப்பை ஏற்படுத்துகின்ற பேரினவாத அடிப்படையில் செயற்படுகின்றவர்களுக்கு எடுபிடிகளாக மாறக் கூடிய நிலைக்கு நாங்கள் செல்லக் கூடாது.
அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் சிலர் நடந்துகொண்ட நடைமுறைகள், இப்படிப் பட்டவர்கள் இனி எதிர்காலத்தில் எப்படி இருப்பார்கள். எனவே ஒரு பலமான ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கும், கொள்கை ரீதியிலான ஒற்றுமையினை ஏற்படுத்துவதுமாக இருந்தால் நிச்சயமாக கூடுதலாக சிந்தித்துத்தான் முடிவு எடுக்க வேண்டும்.
சில வேளைகளில் வெற்றிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துகொள்கின்றவர்கள் வெற்றி பெற்றபின் எங்களுக்கு கட்சி முக்கியமில்லை மக்கள்தான் முக்கியம் என்று கூறுகின்றவர்களையும் பார்த்திருக்கின்றோம்.
அதாவது வெற்றி பெறுவதற்கு ஒரு கட்சி வேண்டும் விளையாட்டுகளைக் காட்டுவதற்கு ஒரு கட்சி வேண்டும் என சிந்திப்பவர்களும் இருக்கின்றார்கள்.
ஒற்றுமை வேண்டும், அந்த ஒற்றுமைக்கு உரியவர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும், கொள்கைப் பிடிப்புள்ளவர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும், தமிழ் தேசியத்தோடு அக்கறையுடையவர்களுடன் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஆனால் பேரினவாதக் கட்சிகள் பணத்தைக் கொடுத்து பதவிகளைக் கொடுத்து அவர்களை தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பந்தாடக் கூடிய விதத்தில் செயற்படுகின்ற போக்குடையவர்களோடு ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்ளும்போது நிச்சயமாக அந்த ஒற்றுமை என்பது எந்தக் கட்சியிலிருந்து வளர்ந்தோமே அந்தக் கட்சியை தூற்றுகின்ற ஒரு மறை கலாசாரத்தை நிலை உருவாகி அது முரண்பாடுகளை தோற்றுவிக்க வழிசமைக்கும்.
என்ன கொள்கை அடிப்படையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எங்கள் அடிப்படை சித்தாந்தம் எப்படி இருக்கவேண்டும் என்கின்ற விடயத்தில் தெளிவுள்ளவர்களோடு ஒத்துச் செல்வதற்கு நாங்கள் என்றும் தயாராக இருக்கின்றோம். என தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.