அதேபோன்று அவர் பிரதமராக இருந்த காலத்தில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்காலம் சாட்சியம் கூறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்து இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஐந்து வருடகாலத்தில் நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான சுதந்திரம், கருத்து வெளியிடல் மற்றும் தகவல் அறியும் உரிமை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். அதேபோன்று நாட்டை விரைவான அபிவிருத்திப் பாதையொன்றை நோக்கித் திருப்பினோம்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அனைத்து நிறுவனங்களையும் அரசியல் மயப்படுத்தப்படுவதிலிருந்து விடுவித்தோம். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதாகவும், சுயாதீனமானதாகவும், நியாயமாகவும் நடைபெற்றமைக்கு இதுவொரு முக்கிய காரணமாகும். எம்மால் மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கைகளுக்கு எதிர்காலம் சாட்சியம் கூறும்.
நான் நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்தேன். பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடினேன். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நாம் கொண்டிருக்கின்ற போதிலும், கோத்தபாய ராஜபக்ஷவிற்குக் கிடைத்திருக்கும் மக்கள் ஆணையை ஏற்றுக்கொண்டு அவருக்கு வேண்டியது போன்று அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
நான் ஜனநாயகத்தை விரும்புகின்றேன். அதற்கு மதிப்பளிக்கின்றேன். ஜனநாயக முறைப்படியே செயற்படுவேன். எனவே புதிய ஜனாதிபதி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பளித்து, எனது பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்திருக்கின்றேன். இதுகுறித்து நாளைய தினம் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன்.
நான் பிரதமராகப் பதவி வகித்த காலப்பகுதியில் புகழ்ச்சி மற்றும் பாராட்டுக்களைப் போன்றே, பெருமளவான விமர்சனங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. நல்லதைப் போன்றே கெட்டதையும் கேட்ட வேண்டியிருந்தது. என்னைப் போற்றிய, தூற்றிய, பாராட்டிய, விமர்சித்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றிகூறுகின்றேன். அதேபோன்று எனது உத்தியோகபூர்வப் பணிகளுக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.