Breaking

Post Top Ad

Wednesday, November 13, 2019

சிறுபான்மை மக்கள் சஜித்திற்கே வாக்களிப்பார்கள் : அஸாத் சாலி

நாட்டில் முப்பது வீதமாக இருக்கும் சிறுபான்மை மக்களில் 28 வீதம் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிக்கவுள்ளனர்.



மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளைவிட அதிகப்படியான வாக்குகளால் சஜித் வெற்றிபெறுவது உறுதியாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.


தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இடம்பெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை நாட்டு பிரஜை அல்லாத ஒரு வேட்பாளர் போட்டியிடுகின்றார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் பிரஜா உரிமை தொடர்பான பிரச்சினை அவர் வேட்புமனு தாக்கல் செய்த நாள்முதல் இருந்துவருகின்றது. இதுவரை அதனை உறுதிசெய்யவில்லை என்பதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கூற்றின் மூலம் தற்போது உறுதியாகி இருக்கின்றது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக குற்றச்சாட்டுக்களுக்காக நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட வேட்பாளராகவே கோத்தாபய ராஜபக்ஷ திகழ்கின்றார்.

கடந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட கடமைகளை அவர் சரியாக நிறைவேற்றி இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். கோத்தாபய ராஜபக்ஷ நாட்டுக்கு செய்ய சேவையாக மக்கள் அறிந்திருப்பது, அவர் ஆட்களை ஏவி, கொலை, கொள்ளை மற்றும் வெள்ளை வேனில் ஆள் கடத்திய விடயங்களாகும்.

அத்துடன் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொண்டவராவார்.

அப்படிப்பட்ட ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை மக்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அதனால் நாடில் இருக்கும் 30வீத சிறுபான்மை மக்களில் 28 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும். அதுதொடர்பான வேலைத்திட்டங்களையும் அவர் முன்வைத்திருக்கின்றார் என அவர்  இதன்போது தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages