Breaking

Post Top Ad

Saturday, September 7, 2019

தீவிரவாதிகளின் உடற்பாகங்களை மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் புதைக்க முடியாது: தீர்மானம் நிறைவேற்றம்.



தீவிரவாதிகளின் உடற்பாகங்களை மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் புதைக்க முடியாது : தீர்மானம் நிறைவேற்றம்.

 தீவிரவாதியின் உடற்பாகங்களை மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் புதைக்க முடியாதென்ற தீர்மானம் ஏகமனதாக  கடந்த (06ம் திகதி ) வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.


மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தலைமையில், செயலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2மணிக்கு நடைபெற்ற சமுகமட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுடனான கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் உடற்பாகங்கள் அண்மையில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் மாநகரசபையின் அனுமதியின்றி புதைக்கப்பட்டிருந்தது. இதற்கு இங்குள்ள மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தினால் குறித்த உடற்பாகங்களை தோண்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு, உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள உடற்பாகங்களை புதைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டளைக்கு  அமைய, மண்முனை தென்மேற்கு பிரதேச மயானமொன்றில் புதைப்பது தொடர்பிலாக பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களிடம் கருத்தறியுமாறு மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு அமைய இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதேசத்திற்குட்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமையுடன், இவ்வாறான ஒன்றுகூடலை நடாத்தியமைக்கு தமது கண்டனங்களையும் தெரிவித்தனர். 99வீதமாக தமிழர்கள் வாழ்கின்ற மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இவ்வாறான உடற்பாகங்களை புதைக்க முடியாதெனவும், சம்பவம் இடம்பெற்ற இடமும், குறித்த தீவிரவாதி பிறந்த இடமும் எங்கோ உள்ள நிலையில் சம்மந்தமில்லாத மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலோ, படுவான்கரைப்பிரதேசத்திலோ இவ்வாறான கருத்தறியும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கூட தவறெனவும், சம்பந்தப்பட்ட தீவிரவாதியின் சொந்த இடத்திலே அவரின் உடற்பாகங்களை புதைக்கவேண்டுமெனவும் கூறி அனைவரின் ஏகோபித்த தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், உதவித்தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages