Breaking

Post Top Ad

Friday, February 1, 2019

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பன மனித குலத்திற்கும், நாட்டிற்கும் அவமானம்...


மனித குலத்திற்கும், நாட்டிற்கும் அவமானமாக இருக்கக் கூடிய இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிச்சயமாக எதிர்த்தே செயற்படுவோம். அது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர்த்தே செயற்படுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.


இன்றைய தினம் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,  

பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் எமது சிறுபான்மையினம் அதிகமாகப் பாதிக்கப்ட்டிருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மை. எனவே எவ்வித சலுகைகளுக்காக நாங்கள் விலைபோகாமல் இந்தச் சட்டங்களை எதிர்த்து நிற்போம்.

மக்கள் விடுதலை முன்னணியினரும் நாங்களும் கடந்த காலத்தில் ஒரு அரசியற் சதி நடந்தபோது எதற்கும் விலைபோகாமல் அந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்காக முன்நின்றோம். முதலாவது வழக்கினை தாக்கல் செய்தது எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் அந்த வழக்கினை சட்டத்தரணி கனகீஸ்வரன், சுமந்திரன் ஆகியோர் முன்னெடுத்துச் சென்று அந்த அரசியற் சதியினை முறியடித்தார்கள். ஒரு சர்வாதிகாரமான அரசியல் உருவாகியிருக்குமாக இருந்தால் 19வது திருத்தத்தைத் தூக்கி எறிந்து விட்டு மீண்டும் அவர்களுக்கு இயைபான 18வது திருத்தத்ததைக் கொண்டு வந்து ஜனநாயகத்திற்குள் ஒரு சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்திருப்பார்கள்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாக இருந்தாலும் சரி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக இருந்தாலும் சரி அதற்கு கிள்ளுக்கிரையாக்கப்படப்போவது அல்லது பலியாக்கப்படப்போவது எமது மக்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பன நாட்டின் இறைமை என்று சொல்லிக் கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் நிலைத்து நிற்பதற்காகப் பயன்படுத்துகின்ற ஒரு மாயவித்தை. அதிகார வர்க்கத்தின் இறைமையை விட எமது மக்களின் உரிமை என்கின்ற விடயம் எமக்கு மிக முக்கியமானவை. மக்களின் உரிமையைத் துவம்சம் செய்து விட்டு அவர்களை அடிமைகளாக்கி விட்டு அதிகார வர்க்கம் இறைமை என்கின்ற சுவையைச் சுவைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கடந்த அரசியல் சூழ்ச்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் ஒரே நிலைப்பாட்டில் ஒரே கொள்கையில் இருந்தார்கள். மஹிந்த எங்களை அழைத்த போதும் நாங்கள் ஜனநாயகத்தின் பக்கமாக நிற்க வேண்டும். அரசியல் யாப்பினைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் வலுவாக நின்றோம். எமது வலுவான நிலைப்பாட்டின் காரணமாக எமது சகோதர முஸ்லீம் கட்சிகள் கூட எங்களோடு இணைந்திருந்தார்கள். குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் இந்தச் சதிக்கு எதிராக நின்று போராடினோம். வெற்றியும் பெற்றோம்.

இந்தப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன மோசமாக மனித உரிமைகள் மீறுகின்ற சட்டங்கள். தற்போது அந்தச் சட்டையை மாற்றி விட்டு கொண்டு வந்திருந்தாலும். இதன் நோக்கம் அதிகார வர்க்கம் தங்களது வண்டவாளங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், தாங்கள் நினைத்தபடி ஆட்சி செய்வதற்கும் இந்தச் சட்டங்களைக் கொண்டு ஜனநாயகத்திற்குள் ஒரு சர்வாதிகாரத்தைக் கொண்டு வருவதேயாகும். எனவே இவ்வாறான சட்டங்களுக்கு நாங்கள் எப்போதும் எதிராகவே செயற்படுவோம்.

கடந்த காலங்களில் குட்டிமணி தங்கதுரை போன்றவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட விதம் அனைவரும் அறிந்ததே பல சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் எடுத்து அதன் அடிப்படையில் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. எனவே மனித குலத்திற்கும், நாட்டிற்கும் அவமானமாக இருக்கக் கூடிய இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிச்சயமாக எதிர்த்தே செயற்படுவோம். அது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர்த்தே செயற்படுவோம் என்று தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages