மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக மண் ஏற்றிய லொறியை விடுவிப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினரால் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை 28.01.2019 சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஆற்று மண் ஏற்றிக் கொண்டிருந்தபோது பொலிஸார் சுற்றிவளைத்த வேளையில் சட்ட விரோதமாக ஆற்று மணல் ஏற்றியவர்கள் ஆற்று மணல் ஏற்றப்பட்ட வாகனங்களைக் கைவிட்டுத் தப்பியோடியுள்ளர்.
நபர்கள் தப்பியோடியதையடுத்து பொலிஸார் லொறியைக் கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் பின்னர் லொறி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து லொறியை மீட்பதற்கு முயற்சித்தபோது லொறியை மீட்பதாயின் 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகத் தருமாறு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோரியுள்ளார்.
இதனையடுத்து லொறி உரிமையாளர் இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினரின் வழிகாட்டலில் புதன்கிழமை மாலை 5.35 மணியளவில் லொறி உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வழங்கியபோது இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினரால் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் பற்றி இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் துவங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.