-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருகோணமலையில் வன ஜீவராசிகள் பிரதேசம் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதால் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோணமலை மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணி மாவட்ட அமைப்பாளரும் திருகோணமலை நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சிவசுப்பிரமணியம் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை 29.01.2019 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
திருகோணமலை மாவட்டத்தில் வன ஒதுக்க பிரதேசம் என்ற வகையிலும், வன ஜீவராசிகள் பிரதேசம் என்ற வகையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களும், வயற் பிரதேசங்களும் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.
இதனால் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களும், விவசாய நிலங்களும் மகாவலி கங்கை வடக்கு வனஒதுக்கம், சுண்ணக்காடு வன ஒதுக்கம், சிம்பில்லா மலை ஒதுக்கம், தென்னபரிச்சான் வன ஒதுக்கம், கும்புக் வௌஹின்ன வன ஒதுக்கம் என்ற வகையிலும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படை வேலைத்தள சரணாலயம், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் அல்லை சரணாலயம், திருக்கோணமடு சரணாலயம் என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களான வயல் நிலங்களும், விவசாய நிலங்களும் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.
இப் பிரதேசங்களில் மக்கள் சுதந்திரமாக விவசாயம் செய்ய முடியாதுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் மக்களுக்கு சொந்தமான பல காணிகள் இதுவரை இன்னமும் முழுமையாக பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்படாத சூழ்நிலையே இங்கு காணப்படுகிறது.' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.