கல்குடாப் பிரதேசத்தில் மாணவர்கள் போதை மாத்திரைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் நிலையில் உள்ளனர் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் 29வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் சனிக்கிழமை மாலை இடம் பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
கல்குடாப் பிரதேசத்தில் மாணவர்கள் போதை மாத்திரைக்கு அடிமையாகி வாழ்க்கை தொலைந்து போகும் நிலவரம் இருக்கின்றது. இந்த விடயத்தில் தாய்மார் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகொள் விடுக்கின்றேன் என்றார்.
கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா மற்றும் மத்தி கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மழை காரணமாக மைதான நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
விளையாட்டுப் போட்டியின் எட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற இருந்த நிலையில் முதலாவது இடத்தினை றஹ்மத் (நீலம்) இல்லமும், இரண்டாம் இடத்தினை நுஸ்ரத் (பச்சை) இல்லமும், மூன்றாம் இடத்தினை சீனத் (சிவப்பு) இல்லமும் பெற்றுக் கொண்ட நிலையில் எட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்று இருந்தால் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற காரணத்தை தீர்ப்பாக வைத்து புள்ளிகளின் அடிப்படையில் முதலாவது வந்த இல்லத்திற்கு வழங்க இருந்த நினைவு கேடயத்தினை மூன்று இல்லங்களுக்கும் வழங்கி வைத்தமை சிறப்பம்சமாகும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.