Breaking

Post Top Ad

Sunday, February 3, 2019

தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்க கூடாது - பொன்.செல்வராசா




தமிழ் கிராமங்களை பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றுவது புத்த சிலைகளை நிறுவுவது போன்ற தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்க கூடாது என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஒக்டோபர் சதியை முறிகியடித்து ஆட்சியைத் தக்கவைப்பதற்கு உதவியவர்கள் யார் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும் என்றும் கூறினார்


மட்டக்களப்பு வாகரையில் சனிக்கிழமை (02) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லாது விட்டிருந்தால் இன்று தேர்தல் காலமாக இருந்திருக்கும் அல்லது தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும். ஐக்கிய தேசிக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூட களைத்துப் போய் இனி ஒன்றும் செய்ய முடியாது தேர்தலுக்கு ஆயத்தமாம் நிலை ஏற்பட்டது.


இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சட்டதரணி கனகீஸ்வரன் ஆகியோர் ஒன்று கூடி இந்த நாடு மட்டுமல்ல சர்வதேசமே வியக்கத்தக்க வகையில் வழக்கை நடாத்தி வழக்கில் வென்று தற்போது இருக்கும் அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள்.


இன்றைய இந்த அரசாங்கம் இந்த நாட்டை ஆழ்வதற்கு வழிவகுத்துக் கொடுத்தது. எமது தமிழ்த் தலைவர்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்கு அறிவும், ஆற்றலும் மிக்க தமிழ்த் தலைவர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலங்கையிலே எந்த அரசியல்வாதியும் விரட்ட முடியாது என்பதை ஒக்டோபர் சதிப் புரட்சி எடுத்தியம்பியிருக்கின்றது.

இந்த நிலையில் நாங்கள் கட்சியின் செயற்பாடுகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கின்ற அளவிற்கு செயற்படுத்திக் கொண்டிருக்கின்ற கால காட்டத்திலே நம்மவர்கள் அதற்கு எதிராகக் கோசமிடுவதும். அதனை எப்படிக் கலைத்து விடலாம் என்று யோசிப்பதுமான விடயங்களைப் பார்க்கின்ற போது அவர்கள் அவர்களையே ஏமாற்றிக் கொள்ளும் அளிவிற்குத் தான் இருக்கின்றார்களே தவிர தமிழ்த் தலைமைகளையும், அறிவாற்றல்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஒருபோதும் பிரித்து விட முடியாது.

தமிழ்த் தலைமைகளை சட்டத்திலே வென்று விட முடியாது என்று சிங்களத் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், ஒரு சிலவற்றைக் கொடுத்து விட்டு அவற்றின் மூலம் பலவற்றை நாங்கள் சாதித்து விடலாம் என்று அரசாங்கம் யோசித்தால் அது அவர்களது மடமைத்தனம் என்றுதான் கொள்வோம். ஏனெனில் எம்மால் இன்று ஆட்சியைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதியாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், அல்லது எந்த அமைச்சராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களை விலத்தி நடந்துகொள்ள முடியாது.


ஆனால் இன்றை சூழ்நிலையிலே எம்மை விரட்டிவிடலாம் என்று சிலபேர் நினைக்கின்றார்கள். ஆனால் அது ஒருபோதும் முடியாது. அண்மையில் முல்லைத்தீவிலே ஒரு புத்தர் சிலை அமைக்கப்பட்டது. காரசாரமான விவாதங்கள் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் இன்று வவுனியாவிலும் ஒரு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல அந்தப் பிரதேசத்தின் பெயரையே சிங்களப் பெயராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதையிட்டு நாங்கள் மனம் வருந்துகின்றோம்.


இந்த செயற்பாட்டை இன்றைய அரசாங்கம் சற்றுச் சிந்திக்க வேண்டும். வருகின்ற ஒரு வருட காலத்தை தாங்கள் ஆள்வதற்கு வழிவகுத்தவர்கள் தமிழர்கள் என்பதை எண்ணிக் கொள்ளாமல் இவ்வாறான கவலைக்கிடமான விடயங்களை முன்னெடுத்துச் செல்வது தமிழ் மக்களுக்கு எதிரானதொரு செயற்பாடாகவே நான் நினைக்கின்றேன்.



இவ்வாறான சில்லறைத்தனமான சேட்டடைகளை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது. தங்களிடம் இருந்து நாங்கள் ஒரு பெரிய வேலையை எதிர்பார்த்திருக்கின்றோம். அதற்கிடையிலே தமிழர்களுடன் மனக்சகப்பை ஏற்படுத்துகின்ற அளவிற்கு எந்த அரசாங்கமாக இருந்தாலும் செயற்படக் கூடாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். 

நாங்கள் கோருகின்ற கோரிக்கை எமக்குத் தேவையான எமது அபிலாசகைளைப் பூர்த்தி செய்கின்ற அரசியலமைப்பை இந்த நாட்டிலே கொண்டு வர வேண்டும். இன்று அது இறுதிக் கட்டத்திலே நின்று கொண்டிருக்கின்றது. அதில் சிலர் சட்டவாதங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். சிலர் அதில் ஒன்றுமில்லை என்று சொல்கின்றார்கள். இத்தனை சட்டவாதிகள், நிபுணர்கள் எல்லாம் சேர்ந்து அமைத்த வரைபு வெறும் பானையாக இருந்திடுமா?

எனவே இவ்வாறு எமது விடயங்கள் இறுதிக் கட்டத்தில் இருக்கின்ற போது நொண்டிச் சாட்டுகளைச் சொல்லி அதனைக் குழப்பி விடுவதற்குச் சிலர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அதன் இறுதி வடிவம் என்ன என்பதை நாங்கள் இன்னும் காணவில்லை.

இது நிபுணர்களின் அறிக்கை வந்திருக்கின்றதே தவிர இறுதி வடிவம் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது இறுதி வடிவம் பெறுவதற்கு இன்னும் இரண்டு மூன்று தடைகளைத் தாண்டவேண்டி இருக்கின்றது. இருக்கின்ற தடைகளைத் தாண்டி வருகின்ற போதுதான் அது ஒரு முழுமையான சட்டவாக்கமாக இருக்குமே தவிர அறைகுறைப் பிரசவத்தில் இருக்கின்ற பிள்ளையைக் கொஞ்சிவிட வேண்டாம் என எமது மக்களுக்கான செயற்பாடுகளில் ஆதரவளிக்காது வெறுமனே அரசியலமைப்பு வெறும்குடம் என்று சொல்பவர்களை நாங்கள் வேண்டிநிற்கின்றோம் என்றார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages