கடந்த 01.02.2019ம் திகதி வெள்ளிக்கிழமை “துர்வாடை வீசும் ஓட்டமாவடியின் நுழைவாயில்: தவிசாளரின் அசமந்தப்போக்கு ஆளுநரின் கவனத்திற்கு” எனும் தலைப்பில் எம்மால் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு- ஓட்டமாவடி பாலத்தை அண்மித்த கொழும்பு பிரதான வீதியின் ஆற்றங்கரையை ஒட்டியதாகக் காணப்படும் பகுதியில் பிளாஸ்டிக், பொலித்தீன் மிருகங்களின் எச்சங்கள், குப்பைக்கூளங்கள் என சுற்றாடலைப் பாதிக்குமளவுக்கு துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றமை தொடர்பிலான செய்திக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளருக்கு சுட்டிக்காட்டியும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்காக பொது மக்கள் இப்பிரதேச ஊடகவியலாளன் என்ற முறையில் என்னிடம் தெரியப்படுத்தினர்.
மக்களின் எதிர்பார்ப்பினைப்பூர்த்தி செய்து அவர்களின் கவலையைப் போக்குமுகமாக இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களினூடாக ஆளுநரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றோம்.
இதன் விளைவாக ஆளுநரின் அதிரடி உத்தரவில் 24 மணி நேரத்துக்குள் தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக உடனடி கவனஞ்செலுத்திய கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சித் திணைக்கள உயரதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரைக்கமைவாக சகல அரச அதிகாரிகளும் பொறுப்புடன் செயற்பட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
ஆளுநரின் இணைப்பாளரும் கோறளைப்பற்று வடக்கு வாகரைப்பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எம்.தாஹிர் 02.02.2019ம் திகதி சனிக்கிழமை மாலை தொலைபேசி மூலமாக எம்முடன் தொடர்பு கொண்டு இவ்விடயம் பற்றி எமக்குத்தெரிவித்தார்.
தீர்க்கப்படாத மக்களின் பிரச்சினைகளை எவ்வித அச்சமுமின்றி ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு சென்று இறைவனின் உதவியோடு அப்பிரச்சினை தீர்க்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், ஓட்டமாவடி பிரதேச மக்கள் மிக நீண்ட காலமாக எதிர்கொண்ட இப்பிரச்சினைக்கு தீர்வைப்பெற்றுக் தந்தமைக்காக ஆளுநருக்கு ஓட்டமாவடி பிரதேச மக்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குட்பட்ட பிரதேசங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் இன்னும் நிறையவே காணப்படுகிறது. இது விடயத்தில் பொறுப்புள்ள ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக கவனஞ்செலுத்த நான் தயாராகவே உள்ளேன்.
- எம்.ரீ.எம்.பாரீஸ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.