மட்டக்களப்பின் தென்பகுதியான தாந்தாமலைப் பிரதேச விவசாயக் கிராமங்களில் தினமும் ஊடுருவும் சுமார் 75 இற்கு மேற்பட்ட காட்டு யானைகளின் துவம்சத்தால் பிரதேச மக்கள் கிலியும் அச்சமும் அடைந்துள்ளதாக தாந்தாமலை மேட்டுப் பயிர்ச் செய்கை விவசாயிகள் சங்க தலைவர் எம். அழகரெட்ணம் தெரிவித்தார்.
தற்போதைய சிறுபோக அறுவடைக் காலத்தில் காட்டு யானைகளின் துவம்சம் அதிகரித்திருப்பதால் தாங்கள் பெரும் பொருளாதார இழப்புக்களையும் மனத் துயரங்களையும் சந்தித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், தற்போது காட்டு யானைகளின் ஊடுருவல் அச்சந்தரும் நிலையில் அதிகரித்துள்ளது. ஆனால் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவ்வாறாக காட்டு யானைகளின் துவம்சம் இந்தளவுக்கு இருக்கவில்லை.
மட்டக்களப்பின் தென் பகுதியான தாந்தாமலைப் பிரதேசத்தை அண்டியுள்ள ரெட்பானா, பன்சேனை, அடச்சகல்குளம், இருமண்டகுளம், 40ஆம் வட்டை, வாழைக்காலை, ஆத்துச்சேனை, கெவுளியாமடு உள்ளிட்ட விவசாயக் கிராமங்களில் சுமார் 75 இற்கு மேற்பட்ட காட்டு யானைகள் நடமாடுகின்றன.
இவை விவசாய நிலங்களுக்குள்ளும் மக்களின் குடியிருப்புப் பிரதேசங்களுக்குள்ளும் ஊடுருவுவதைத் கட்டுப்படுத்தும் பொருட்டு யானைத் தடுப்பு மின்சார வேலிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றையும் மீறி, ஏறி மிதித்துக் கொண்டு ஊடுருவும் நவீன பாணி பாதுகாப்பு முறையை காட்டு யானைகள் கனகச்சிதமாகக் கையாளுகின்றன.
மின்சார வேலிகளுக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டு மின்சாரக் கம்பிகளில் சிக்காத வண்ணம் வேலிக் கட்டைகளில் ஏறி மிதித்துக்கொண்டு காட்டு யானைகள் சாவகாசமாக விவசாய நிலங்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் நுழைகின்றன.
இதனால் மின்சார வேலிகளும் பயனற்ற ஒன்றாக மாறிவிட்டிருக்கின்றது.
யானை வெடிக்கும் காட்டு யானைகள் இசைவாக்கம் அடைந்து விட்டதனால் வெடியோசைக்கும் அவை மிரள்வதில்லை.
மின்சார வேலி அமைப்பதற்காக செலவிடப்படும் பல இலட்ச ரூபாய் அரச பணத்தினால் ஆன பயன் ஒன்றுமில்லை.
இவ்வாறான நிலையில் விவசாயக் கிராம மக்களின் வாழ்க்கை இரவில் அச்சத்துடனும், காட்டு யானைகள் தங்கள் விவசாயப் பயிர்களுக்கும் குடியிருப்புகளுக்கும் ஏற்படுத்தும் அழிவினால் விரக்தியிலும் கழிகிறது.
இதனையிட்டு அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும். குறிப்பாக திட்டங்களை வகுக்கும்போது கிராம மக்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு காட்டு யானைகளிடமிருந்து கிராம மக்களையும் விவசாய நடவடிக்கைகளையும் பாதுகாக்கும் திட்டத்தில் கிராம மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.' என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.